Loading...

Articles.

Enjoy your read!

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?

”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு? சாம்பல் மேடுகளும், சூழும் புகைமண்டலமும்…” என்று திரையரங்குகளில் காட்டப்படும் புகைப்பிடித்தலுக்கெதிரான விளம்பரம், நம் பல்கலைக்கழகத்திற்கு வேறொரு வகையில் பொருந்துகிறது; அது வாகன மாற்றம். கல்லூரிக் காலத்தின் முதல் இரண்டு வருடங்களில் ‘அண்ணாமலை’ ரஜினிகாந்தைப் போல் கால்நடையாகவும், மிதிவண்டியிலும் வகுப்புகளுக்கும், ஊர் சுற்றவும் சென்று கொண்டிருந்த பெரும்பாலான மாணவர்கள், மூன்றாம் வருடத்திலிருந்து “போடா போடா” என்று ‘இறுதிச்சுற்று’ மாதவனைப் போல் புல்லெட்டுகளில் பறக்கின்றனர்.     

 

 

 

 

 

 

 

 

 

இவ்வாகன ஓட்டிகளைப் பல வகையாகத் தரம் பிரிக்கலாம்.

திருவாளர்/திருமதி திருதிரு: சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பற்றிச் சிறிதும் தெரிந்துகொள்ளாமல், பின்னால் அமரும் அப்பாவியை “கூகிள் மேப்ஸ்”-ல் தேடச் சொல்லிவிட்டு, தட்டுத்தடுமாறும் வகையறாக்கள் இவர்கள். வண்டி ஓட்டும்போதே காகத்தைப் போல அங்குமிங்கும் பார்வையை அலைபாய விடுவர். கூகிளாண்டவர் காட்டும் வழியையும் தொடராமல், சுயமாகச் சிந்திக்கவும் தெரியாமல், சுற்றி அலைந்தாலும், மனம் தளராமல் மக்களிடம் விசாரித்துக் கடைசியில் எப்படியோ சேர வேண்டிய இடத்திற்குச் சென்று விட்டு இத்தகைய நபர்கள் கூறும் கடைசி வசனம், “எனக்கே இந்த வழி தெரியும்; நீதான் கூகிளப் பாத்துக் கொழம்பிட்ட” என்பது. பின்னாலிருப்பவரின் மனக்குமுறலைச் சொல்லவே தேவையில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘சத்த’நாராயணன்/நாராயணி: இவர்களுக்குப் பெட்ரோல், டீசல் இல்லையென்றாலும் வண்டி ஓடிவிடும்; ஒலிப்பான் (ஹாரன்) இல்லாமல் வண்டி நகராது. ஆம்புலன்ஸுக்குப் போட்டியாகச் சப்தமிடும் இவர்களது வாகனங்களில், தொட்டது தொண்ணூறுக்கும் வெவ்வேறு சப்தங்கள் இருக்கும். ‘கியர்’ மாற்றுவது தொடங்கி, விளக்குகள் ஒளிர்வது வரை அனைத்திற்கும் விதவிதமான இசை மீட்டுவார்கள். இவர்களது வண்டிகளிலிருந்து ஒரு நாளில் வரும் ஒலியானது, இசைஞானியின் அத்தனைப் பாடல்களின் நேரங்களைச் சேர்த்தாலும் ஈடாகாது.

சிக்னல்களில் அதிகப்படியாக நிற்கும் ஓரிரு வினாடிகளில், வாழ்க்கையின் புண்ணியமே போய்விடும் என்பது போல ஒலிப்பான்களை அலறவிட்டு, ஏற்கனவே வாகனங்களை இயக்கத் தடுமாறும் பயணிகளைக் கலங்கடிப்பது இவர்களது முக்கியமான பொழுதுபோக்கு.

 

 

 

 

 

 

 

 

 

 

‘முறுக்கு’ ஓசை: முறுக்கு மீசை தெரியும்; அதென்ன முறுக்கு ஓசை? இத்தகைய வகையினருக்கு வண்டியின் ‘ஆக்ஸிலரேட்டர்’ என்பது செல்லப்பிராணியின் காது போல. பிடித்துத் திருகித்திருகி விளையாடுவார்கள். இவர்களின் வண்டியை மனிதர்களாக உருவகம் செய்தால், ’சிங்கம்’ திரைப்படத்தில் வரும் சூர்யாவின் குரல் சரியாகப் பொருந்தும். இவர்கள் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையானது, பின்னால் வரும் வாகன ஓட்டியின் முகத்தைக் கார்மேகமாய் மாற்றிவிடும். சிவப்பழகு சாயக் கம்பெனி முதலாளிகளின் கைக்கூலிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிற கூட்டத்தினர் இவர்கள்தாம்.

 

 

 

 

 

 

 

 

 

பழக்கதோஷத்தில் சிக்னல்களிலும், வாகன நெரிசல்களிலும் வண்டியை முறுக்கி, முன்னால் இருக்கும் வாகனத்தை இடித்துவிட்டு, வசைகளை வாங்கிக்கட்டிக்கொள்வது இவர்களது வாடிக்கை.

                       

 

 

 

 

 

 

 

 

 

வாகனங்களைப் பற்றியான திரைப்படங்களின் மீது இவர்களுக்குத் தனி மோகம் இருக்கும். ‘அச்சம் என்பது மடமையடா’ டிரெய்லரில் இவர்களுக்கு மஞ்சிமா மோஹனைக் காட்டிலும் பிடித்த விஷயம், ‘ராயல் என்ஃபீல்ட்’ தான். சாலையோரத்தில் சிறிதாக இடமிருந்தாலும் அதற்குள் புகுந்து செல்வதற்கு, பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்வது இவர்களுக்குப் பிடித்தமான செயல்.

கட்டிப்பிடி வைத்தியர்: கடைசி வகையைச் சேர்ந்த இவர்கள் பெரும்பாலும் தம்பதியராகவே வண்டியில் செல்வர். சுருக்குக் கயிறு கழுத்தை நெரிப்பதைப் போலப் பின்னால் அமர்ந்திருப்பவர், ஓட்டுனரைக் கட்டிப்பிடித்துச் செல்வதைக் காணக் கண் கோடி வேண்டும். ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் வரும் ‘மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்’ எனும் பாடலின் காட்சியமைப்பு இவர்களை மனதில் வைத்துப் படமாக்கப்பட்டதுதான் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள்.

 

 

 

 

 

 

 

 

 

”நல்லாத்தானே இருந்தீங்க? எங்க இருந்து வந்துச்சு இந்த வண்டி?” என்று ‘மௌனம் பேசியதே’ சூர்யா சாயலில் கேள்வி கேட்டால், இத்தகைய திடீர் மாற்றத்திற்கு இவர்கள் அனைவரும் கூறும் ஒரு காரணம், “ப்ராஜெக்ட் வேல இருக்குல்ல? நெறைய அலையணும்” என்பதுதான். உண்மையில் அமிஞ்சிக்கரையிலுள்ள ’அம்பா ஸ்கைவாக்’க்கும், அடையாறிலுள்ள ‘ஆசிஃப் பிரியாணி’க்கும் அலைவதற்குத்தான் இவர்களது வாகனங்கள் பயன்படும்.

தாராள மனம் கொண்ட, கர்ண பரம்பரை வாரிசுகள் சிலர், கேட்டவர்களுக்கெல்லாம் வண்டியைக் கொடுத்துவிட்டுத் தமக்குத் தேவைப்படும் நேரத்தில் நிர்க்கதியாய் நிற்பதும், வண்டியை எடுத்துச் சென்ற மேதாவி வேறு இடத்தில் நிறுத்தியிருந்தால் உரிமையாளர்கள் ‘பார்க்கிங்’ முழுவதும் தேடி அலைவதும் கண்கொள்ளாக் காட்சிகள்.

இதற்கிடையில் எக்கச்சக்கமாய்ப் பெருகிய வாகனங்களின் எண்ணிக்கையால் கிண்டி என்னும் பெயரை ‘வண்டி’ என்று அரசாங்கம் மாற்றப் போகிறது என்றொரு புரளி கிளம்பியதாக வரலாறு.

 

 

                                                                                                        

 

 

 

 

 

 

 

 

 

இயந்திரவியல் மாணவர்கள் விடுதியிலிருந்து வகுப்புகளுக்குச் செல்ல மூன்று பேருந்து நிறுத்தங்களைக் (கோட்டூர்புரம், காந்தி மண்டபம், சின்னமலை) கடந்து செல்ல வேண்டியிருப்பதால், கோட்டூர்புரம் நுழைவாயிலில் இருந்து தொலைதூரக் கல்விமைய (DOTE) நுழைவாயில் வரை செல்வதற்கு வண்டிகளைப் பயன்படுத்துவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இவ்வளவும் இருந்தும் வாகனங்களை உண்மையிலேயே உபயோகமான விஷயங்களுக்குப் பயன்படுத்தும் மாணவர்கள் சிலர், “இப்படி எதையும் சொல்லாமல், நாம் ஏன் இந்தப் புகையை ஆதரிக்க வேண்டும்?” என்று கேட்டாலும், வண்டியானது, கல்லூரி வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிவருவதைக் கண்கூடாக உணர முடிகிறது. இதுவும் கடந்து போகும் !

Tagged in : News and views, Madhumitha Sekar, Tamil, Giridharan Raghu, Karthik Kumar,

   

Similar Articles.