Loading...

Articles.

Enjoy your read!

எழுத்துப்பிழை எழுத்தாளன்

இயல்பான சிரிப்பு; தற்பெருமை இல்லா முகம்; பேசுகையில், தென்றலாய் வீசும் தமிழ்; இவை தான் இந்த 

இளம் எழுத்தாளனின் அடையாளங்கள். 

26 வயதில் தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டு, மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருக்கும் 

மனோபாரதி தான், நம் கல்லூரி உருவாக்கிய எழுத்தாளன். 2012 ஆம் ஆண்டு, தகவல் தொழில்நுட்பத்தில் 

முதுகலைப் பட்டம் பெற்ற மனோபாரதி, மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டு, தன்னுடைய 

தமிழ்த் தாகத்தை எழுத்தின் மூலமாகத் தணித்துக் கொண்டிருக்கிறார். 

“தான் எழுதுவதே ஒரு பிழை; அதனால் தான் ‘எழுத்துப்பிழை’ என இரண்டு புத்தகங்களுக்கும் பெயர் 

சூட்டினேன்” என்று சிரிப்பு வழியும் முகத்தோடு, தன்னுடைய இரண்டாவது புத்தகமான, “விகடகவி-எழுத்துப்பிழை 

2.௦”-வின் புத்தக வெளியீட்டு விழாவில் நம்மிடையே  பேசத் தொடங்கினார், நம் எழுத்தாளர்.

நிருபர் : வணக்கம். எங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.    

எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

மனோபாரதி :  நன்றி. என்னில் இயல்பாகவே கதை சொல்லும் பழக்கம் பள்ளிப் பருவத்திலேயே தோன்றியது. 

வகுப்பில் பாடம் எடுக்கும் போது கூட, அதை அப்படியே உண்மைக் கதையாக மனதில் கற்பனை செய்து 

பார்ப்பேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, என் ஆசிரியர், அறிவுடை நம்பி அவர்கள், ”பெயரிலேயே 

பாரதியை வைத்துள்ளாயே, நீ ஏதும் எழுதுவாயா?” என்று ஒருமுறை கேட்டார். அவரால் ஊன்றப்பட்ட அந்த விதை 

தான், இன்று செடியாக வளர்ந்து வருகிறது. 

நிரு : விரைவில் அந்தச் செடி மரமாக வேரூன்ற வாழ்த்துக்கள்.

கிண்டி பொறியியல் கல்லூரி உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் தாக்கங்களை ஏற்படுத்தியதா?

மனோ : நிச்சயமாக. கல்லூரி வாழ்க்கையைப் பொற்காலம் என்றே கூறலாம்.  கல்லூரியே எனக்கு வாழ்க்கையைக் 

கற்றுக் கொடுத்தது. இந்தப் புத்தகம் வெளிவரக் காரணமாக இருந்த, ‘எழுத்துப்பிழை குழு’-வை நிர்வகிக்கும்  

தன்மையையும், காலத்தை சரியாக உபயோகிக்கும் விதத்தையும், மனிதர்களை உணரும் அற்புதத்தையும் 

கல்லூரியில் தான் கற்றுக் கொண்டேன்.

நிரு : உங்களின் முன்னோடி/வழிகாட்டி யார்?

மனோ :  என் அம்மா. எனக்கு எப்பொழும் இரண்டு உலகத்தில் வாழப்  பிடிக்கும். ஒன்று என்னுடைய எழுத்துலகம். 

மற்றொன்று, என்னுடைய தொழில்முறை உலகம். இரண்டுக்கும் காலம் ஒதுக்குவதை என் அம்மாவிடம் தான் 

கற்றுக் கொண்டேன். ”காலை எழுந்ததும் வேலை; மாலை முழுவதும் புத்தகம்” என்று பாரதியையும் பின்பற்றுபவன் 

நிரு : உங்களின் படைப்பில் யதார்த்தம் கொட்டிக் கிடக்கிறதே. எவ்வாறு உங்கள் எழுத்தாணியில் யதார்த்தத்தைக் 

கொண்டு வருகிறீர்கள்?

மனோ : அது மிகவும் எளிது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும், இயற்கையையும் நாம் புரிந்து கொண்டால், 

யதார்த்தம் என்பது தானாக வந்துவிடும்.

நிரு : புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நடைபெற்றவையா?

மனோ : (புன்சிரிப்புடன்) நிச்சயமாக இல்லை. ‘கவிதைக்குப் பொய்யழகு; கதைக்கு இரண்டுமடங்குப் பொய்யழகு’. 

அனைத்துக் கதைகளும் கற்பனையே.நாம் எவ்வளவு கற்பனை செய்கிறோம் என்பது முக்கியமல்ல.அந்தக் 

கற்பனையை எவ்வாறு கண்முன்னே நிறுத்துகிறோம் என்பதே முக்கியம்.

நிரு : உங்கள் ‘எழுத்துப்பிழை குழு’வைப் பற்றி சில பகிர்வுகள்.

மனோ : என் பட்டப்படிப்பை முடிக்கும் வரை எனக்கு ஒரே ஒரு அம்மா தான். தற்போது,  எனக்கு பதின்மூன்று 

அம்மாக்கள். ஒவ்வொருவரும் வைரத்துளிகளாய் என் வெற்றியில் முக்கியப் பங்காற்றினர். அவர்கள் இல்லையேல், 

மனோபாரதியும் இல்லை; எழுத்துப்பிழையும் இல்லை. அவர்களுக்கு நன்றி என்னும் ஒரு வார்த்தையை மட்டும் 

உரித்தாக்க முடியாது. என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்குக் கடன் பட்டுள்ளேன்.

நிரு : உங்கள் எதிர்காலக் கனவுகள்/படைப்புகள் என்னென்ன?

மனோ : அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால்,புத்தகம் படிப்பதை விட்டுவிட்டனர். அதை மீட்டெடுக்க 

வேண்டும் என்பதே எனது ஆசை. தற்போது, ‘திருவான்மியூரின் அழகான கொலைகாரி’ என்ற நாவலை எழுதிக் 

கொண்டிருக்கிறேன். மேலும், விகடகவி புத்தகத்தை ஒலி வடிவில் வெளியிடவும் முயற்சிகள் செய்து 

கொண்டிருக்கிறேன். திரைப்படத்  துறையில் கதாசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய 

எதிர்காலக் கனவு.

நிரு : மிக்க மகிழ்ச்சி. உங்கள் கனவுகளுக்கும், படைப்புகளுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்.

தொடர்புக்கு : http://www.facebook.com/ezhuthupizhai

Tagged in : News and views, Muthu Kumari, Alumni, Krishna Anandhan, Srinidhi Sivakumar, Tamil, சுரேந்தர் இரவி,

   

Similar Articles.