Loading...

Articles.

Enjoy your read!

சொர்க்கத்தில் மற்றொரு நாள் !

அன்று, தேர்வுகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர், முதல் தேர்வும்
நடைபெற்றது. தேர்வு எழுதும் பொழுதே, "இந்த ஏரியாவுல வந்துருச்சாம்...! " என்ற
வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே, தேர்வை எழுதிவிட்டு வந்தோம். மறுநாளே
மற்றுமொறு தேர்வு!  "என்னடா இடைவேளையே இன்றி தேர்வுகளாக இருக்கு " என்று
நினைத்துக்கொண்டே, வேறு வழி இன்றி படித்துக் கொண்டு இருந்தோம்.  சிறிது
நேரத்தில் உற்சாகத்தின் ஒலி கேட்டது.  என்னவென்று தெரியவில்லையே என்று
வெளியே வந்து பார்த்தால், அனைவரும் எங்களைப் போல் வந்து விட்டுப், புரளி தான்
என்று மறுபடியும் உள்ளே சென்றனர் . இதே போல் மற்றுமொரு முறை நடந்தது.
என்னவென்று புரியாமல் இருந்த பொழுதே, கொண்டாட்டம் துவங்கியது. போன்-ஐ
எடுத்து பார்த்தால், செய்திகளில்  மாணவர்கள் விடுதியைக் காலி செய்யுமாறு சுற்றறிக்கை
வந்திருந்தது. ஆம், அன்று 16/03/2020.  "ஹப்பாடா!  Exam cancel" என்ற எண்ணத்தோடு
ஊருக்குக் கிளம்பி விட்டோம்.

வீட்டிற்கு வந்த உடன் தான் தெரிந்தது இந்தியாவின் இத்தகைய நிலை என்று . பின், ஜுன் வரை
வகுப்புகளை நடத்தத் தடை விதிக்கப் பட்டது. முதலில் முழு ஆண்டுப் பரிட்சை முடித்த
விடுமுறை போல், புத்தகமின்றி நல்ல தூக்கத்துடன் கழிந்த நாட்கள், பின்பு சலிப்பின்
உச்சமாகும் என்று அறியாமல் இருந்த நாட்கள் அவை. கல்லூரியைப்  பிரிந்தும் ஏங்கினேன். சில நாட்கள் சென்றன.
நாட்களை எப்படி கழிக்க என்று யோசித்து, தொடர்கள் (series) சில பார்க்க ஆரம்பித்தேன்.
விறுவிறுப்புடன் சில நாட்கள் கழிந்தன. மறுபடியும் பொழுதை எப்படிச் சுவாரசியமாகக்
கழிப்பது என்று புரியாமல் நின்றேன். வீட்டு வேலை சிலவற்றிக்கு உதவினேன், இரு
சமையல் dish களையும் செய்தேன். அவ்வாறு
ஒருநாள், கேக் செய்வதற்காக தேவையான பொருட்களை வாங்கி, பலக்
காணொளிகள் (video) பார்த்துவிட்டு, மனதில் தைரியத்தை வரவழைத்துக்
கொண்டு, செய்ய ஆரம்பித்தேன். ஒரு சின்னத் தவறு நடந்ததால், அது
சொதப்பிவிட்டது (கீழ்பக்கம் நன்றகாவும், மேல்புறம் சரியாக இல்லாமலும்
ஆனது). என்ன சொல்வார்களோ என்று எண்ணிக்கொண்டே அதை வீட்டில் அனைவருக்கும் கொடுத்தேன். அதைச் சாப்பிட்டு விட்டு,  "பரவாயில்ல,
செஞ்சாதானே தெரியும்! " என்றனர். ஒரு நல்ல பின்னூட்டத்தோடு(feedback)
இன்னும் இரு சிறிய dish -கள் செய்தேன். வெற்றியோடு முடிந்தது. ஒரு சிறு
சந்தோஷம் பிறந்தது..! பின்பு என்னுடைய சிறுவயது ஓவியங்கள், புத்தகங்கள் என
அனைத்தையும் எடுத்தேன். எனக்கு அப்போது தான் ஓவியங்களின் மீது இருந்த
தீராப்பற்று  நினைவுக்கு வந்தது. அதனால், என்னுடைய ஒரு பகுதி நேரத்தை அதற்காக
ஒதுக்கினேன். வரையும் பொழுது, "நிம்மதி" என்ற உணர்வைப் பெற்றேன். என் புத்தகங்களையும், நோட்டுகளையும் எடுத்துப் பார்த்துவிட்டு என்
கையெழுத்தைப் பார்த்து நகைத்துக்கொண்டேன்.

அப்பொழுது தான் தெரிந்தது,

"இந்த உலகில் மிகச்சிறந்த பரிசு என்பது இனிப்பான நினைவுகள் மட்டுமே! " என்று.
அதன் பிறகு கைப்பேசியை எடுத்தேன், என் பழைய நண்பர்களை அழைத்தேன். மணிக்கணக்கில் பேசினாலும் நேரம் போனதே தெரியவில்லை. சிரிப்பும் சந்தோஷமும்
பெற்றேன். “அப்படியே பள்ளியிலேயே இருந்திருக்கக்கூடாதா..? " என்ற ஒரு வருத்தம்
கலந்த உணர்வோடு கைபேசியை வைத்தேன்.

இந்த நாட்கள் என் திறமைகளை வெளிக்
கொணர மட்டுமல்லாது,வாழ்வதற்குத் தேவையான முக்கியமான உணர்வுகளான நிம்மதி,
சந்தோஷம், உறவுகளின் வலிமை என்பவையெல்லாம் படத்தில் மட்டும்
காட்டப்படுபவையல்ல என்றும், நம் கையில் உள்ளவை தான் என்றும் உணர்ந்தேன்.
சுவையான இந்த நாட்கள் தொடருமா..?!

Tagged in : MySpace, Memories, Hobbies, Quarantine Life,

   

Similar Articles.