Loading...

Articles.

Enjoy your read!

இசையெனும் வரத்தை யார் தந்தது? - ‘நகலிசைக் கலைஞன்’ புத்தக விமர்சனம்

இசை குறித்த பதிவுகளும், புத்தகங்களும் பெரும்பாலும் திரையிசை சார்ந்த எழுத்துக்களாகவோ, அல்லது சாஸ்திரிய சங்கீதம் பற்றியதாகவோ இருக்கும். ராக ஆலாபனைகளும், தாள சந்தங்களும், நுணுக்கங்களும் விவரிக்கப்பட்டிருக்கும் அப்புத்தகங்களைப் பொதுவான ஒரு இசை ரசிகன் வாசிக்க இயலாது. வாசகர்களுக்கும், எழுத்தாளனுக்கும் தொடர்பேயின்றி தனித்தனித் தண்டவாளங்களாகச் செல்லும் அந்நூல்களிற்கு மத்தியில், ‘ஆர்க்கெஸ்ட்ரா’ இசைக்குழுவினர்களின் வாழ்வை விவரிக்கும் இப்புத்தகம் முக்கியமான இடம்பெறுகிறது.

 

நூலின் தலைப்பே மிகவும் சுவாரசியமானது. ஏனெனில், ‘ஆர்க்கெஸ்ட்ரா’ குழுவினர் திருமணங்களிலோ, பிற விழாக்களிலோ இசைக்கும் அனைத்து பாடல்களும் திரைப்படங்களில் ஏற்கனவே வந்த பாடல்களாகத்தான் இருக்கும். ஆனால், இசையை அப்படியே நகலெடுப்பதில்தான் திறமையே இருக்கிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானே ஒரு பேட்டியில் சொன்னார், “நான் ஒரு முறை உருவாக்கிய மெட்டிலமைந்த பாடல், இரண்டாம் முறை இசைக்கப்படும்போது முன்புபோல் இருப்பதில்லை” என்று. அதுதான் இசை செய்யும் மாயம். அத்தகைய சிரமங்களுடைய விஷயமான இசையை மீட்டுருவாக்கம் செய்யும் இக்கலைஞர்களின் மீதான மதிப்பு பெருகுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நூலாசிரியர் ஜான் சுந்தர், ‘ஜான் டி குரூஸ்’ எனும் தன் பெயரை, இசைக்கு உதவிய நண்பர் சுந்தரின் பெயருடன் இணைத்தது நட்பிற்கான இலக்கணம். சமீபத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ள ‘பாட்ஷா’ திரைப்படத்தை நினைவுபடுத்தினாலும், நெகிழ்ச்சியுறச் செய்கிறது.

சிறுசிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூல், ஒரு பேருந்துப் பயணத்திலோ, ஒரு நாள் ஆர்.டி.ஓ அலுவலகத்திலோ, வங்கியிலோ அமர்ந்திருக்கும்போது படித்துமுடித்து விடக்கூடிய சுவாரசியத்துடன் அமைந்திருக்கிறது. பேச்சுவழக்கு உரையாடலையும், செந்தமிழ் நடையையும் கலந்து தன் எழுத்தை நகைச்சுவையாகவும், மறக்க முடியாததாகவும் மாற்றும் இயல்பு ஆசிரியருக்கு இயல்பாகவே இருப்பது தெரிகிறது. சோகங்களையும், மனத்தின் ஆழமான வலிகளையும் கூட நகையுணர்வுடன் அவர் எடுத்துரைக்கும் விதம், கணநேரத்தில் சிரிக்க வைத்தாலும், ஆழமான சிந்தனைகளை அகத்தில் எழுப்புகிறது

ஒரு திரையிசைக் குழு நாம் போகும் திருமணத்தில் இசை பொழிந்து கொண்டிருந்தால், நம்மில் எத்தனை பேர் அதை உண்மையாகவே கவனிப்போம்? ‘நாராசமா இருக்கு’ என்று இலகுவாய்ச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவோம்; ஆனால், அவர்கள் திரைக்குப்பின் செய்யும் அவ்வளவு கடின உழைப்பும் இப்புத்தகம் படித்தபின்பு தெளிவாகப் புலப்படுகிறது; மறுமுறை மண்டபங்களுக்குச் செல்லும்போது, ‘இசைக்குழு எங்கே?’ என்றே வாசகனைத் தேட வைக்கும்.

புத்தகத்தின் சில பகுதிகள் குறிப்பிடத்தகுந்தவை.

‘சங்கதி’ பாடுவதற்கான நாசூக்கான வழிமுறையை நகைச்சுவையாய்ச் சொல்லும் ‘அல்மல்மா’ எனும் பகுதி. உச்ச ஸ்தாயியில் பாடும்போது மகரமும், னகரமும் லகரமாய் மாற்றிப் பாடி, குரல்வளத்தைப் பக்குவமாய் வைத்திருக்கும் கலைஞர்களின் ‘டெக்னிக்’ ஆச்சரியமூட்டும் ஒரு நுணுக்கம். இதைப் படிக்கும்போது, சமீபத்தில் வெளிவந்த ‘மறுவார்த்தை பேசாதே’ எனும் பாடல்தான் நினைவுக்கு வந்த்து; ‘பதில் நானும் தரும் முல்பே’ என்று ‘முன்பே’வை ‘முல்பே’வாய் மாற்றிய சித் ஸ்ரீராமின் சாணக்கியத்தனம் மூளையில் மின்னலென வெட்டியது.

'ஒரு ஜீவல் அழைத்தது ஒரு ஜீவல் துடித்தது

......

கள்நீரும் விட வேண்டாம்’

டி.எம்.எஸ் குரலில் ஒரு கலைஞர் பாடுவதைப் பார்த்து, ‘போய் மாட்டுக்கு ஊட்துறா உன் கள்நீரை’ என்று மற்றொருவர் பகடி செய்வது உச்சக்கட்டம்.

‘ரத்து’ எனும் பகுதியில் ஆங்கிலப் பிரயோகங்கள் குறித்த உரையாடலில், இசைக்கலைஞர்களுக்கு ‘இசை’ ஒன்றுதான் மொழி; மற்ற அனைத்தும் இசை கேட்பவர்களுக்கே எனும் செய்தி, படிமமாய் உணரப்படுகிறது. ‘ஓ மை லார்ட் ஆன்ஸர் மை ப்ரேயர்’ எனும் வரியை, ‘ஓ மை லார்ட் கேன்ஸல் மை ப்ரேயர்’ என்று பாடும் பாடகர் பைரவன், இசையெனும் மொழி மட்டுமே அறிந்த ஓர் உன்னதக் கலைஞன்.

இதுபோலவே பல்வேறு நிகழ்வுகள் உணர்வுப்பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன. ‘குடிப்பதற்கு’க் காசு வேண்டும் என்பதற்காக, ஏதோ ஒரு சத்திரத்தில் வண்டியை நிறுத்தி, இசைக் கச்சேரி நடத்திவிட்டு, அறியாப்பிள்ளை போல ‘மண்டபம் மாறி வந்துட்டோம் போல, கச்சேரியும் போச்சு, இப்போ காசும் போச்சே’ என்று நீலிக்கண்ணீர் வடித்து, மாப்பிள்ளை – பெண் வீட்டாரிடம் சன்மானம் வாங்கும் இடம் புன்னகையை வரவழைத்தாலும், ‘நகலிசைக் கலைஞர்க’ளின் வாழ்வு அவலத்தையே விவரிக்கின்றன. அப்படியே நினைவுகள் சிலந்திவலையாய் முன்னேற, தமிழ் மாதங்களில் ஒரு மாதம் முழுவதும் சுபகாரியங்கள் செய்யவே கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பதையும், அந்நேரங்களில் இவர்களின் பிழைப்பு எவ்வாறு ஓடும் என்பதையும் தொடர்புபடுத்திப் பார்க்கத் தோன்றுகிறது.

முந்தையக் காலங்களில் இசை என்பது எப்படி ஒரு மாசற்ற கலையாகப் பார்க்கப் பட்டது என்பதையும், இன்றைய தினங்களில் சின்னத்திரையில் போலியாக அழ வைத்து, அவ்வப்போது அழகாய்ப் பாடும் குழந்தைகளை வியாபாரப் பொருட்களாக்கும் ‘ரியாலிட்டி ஷோ’க்களையும் ஒப்புநோக்கும் ‘ராகதீபம் ஏற்றும் நேரம்’ எனும் பகுதி, உண்மையான இசையை நாம் எப்படியெல்லாம் தொலைத்து வருகிறோம் எனக் காட்டுகிறது.

நூலில் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகள் இரு முக்கியமான விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன.

  1. பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்குமான உறவு. இளையராஜாவின் பாடல்களின் பசுமை அவரது மேதைமைக்கு ஒரு சான்று என்றாலும், கவிஞர்களின் பங்கும், இசையும், வார்த்தைகளும் சங்கமிக்கும் மகத்துவமும் எந்த அளவிற்கு முக்கியமானவை என்று நம்மை யோசிக்க வைக்கிறது. காதல், நட்பு, பிரிவு, சோகம், கோபம், வருத்தம், பழிவாங்குதல் போன்ற உணர்வுகளை அப்பட்டமாய் விவரிக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் வந்த காலம் மறைந்து, ஆங்கிலக் கலப்பு மிகுந்த பாடல்வரிகள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலப் பாடல்கள் நினைவலையில் நனைக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சமீபத்தில் மாறியிருக்கிறது என்று கூறப்படும் கருத்திற்கும், இது ஒரு காரணமாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

 

  1. மரபு இசைக்கும், தொழில்நுட்பம் மூலமாக வரும் இசைக்குமான வித்தியாசம். ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தின் விளைவாய் இன்று எவரும் பாடலாம் எனும் நிலை வந்துவிட்ட்து. ஸ்ருதி சேரவில்லையெனில், ‘ஆட்டோட்யூன்’ செய்துவிடலாம்; உண்மையான தாள வாத்தியங்களுக்குப் பதிலாக ‘ஈ.டி.எம். என்று சொல்லக்கூடிய தொழில்நுட்பம் சார்ந்த இசைச் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பல அம்சங்கள் வந்துவிட்டாலும், இவையனைத்தும் செவிகளுக்கான இசையாக மட்டுமே அமைகிறது. ஜீவனைத் தொட்டு, ஆன்மாவை உருக வைக்கும் மரபிசையே காலம் தாண்டி வாழும் எனும் வெளிப்படையான உண்மை புலப்படுகிறது.

இளையராஜாவை ‘மொட்டை’ என்றும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தைக் ‘குண்டன்’ என்றும் உரிமையுடன் அழைக்கும் இந்’நகலிசைக் கலைஞர்கள்’ என்றும் நெஞ்சோடு நிற்பார்கள். உணவகங்களிலும், மண்டபங்களிலும் பதிவு செய்யப்பட்ட இசைக் கோப்புகள் ஒலிப்பானில் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும், நாம் மறந்துவிட்ட இந்த இசைக்கலஞர்கள் நினைவில் முட்டி மோதுவார்கள்.

கட்டுரைக்கும் (கதையென்றுதான் சொல்லுவதாக உத்தேசம்; ஆனால், இவையனைத்தும் கதையல்ல நிஜம், எனவே அதைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை) இடையில் கோட்டோவியங்கள் இருந்திருந்தால் மேலும் வாசகர்களை உள்ளிழுக்கும் காந்த சக்தி வாய்ந்த புத்தகம் இது.

அட்டைப்படம் சொல்லும் செய்தி மிக வலுவானது; மஞ்சள் நிற அட்டையில் கறுப்பு நிறத்தில் வரையப்பட்டிருக்கும் இசைக்கருவிகள், சூரியனைப்போல் வெளிச்சமாய் இருந்த கலைஞர்களின் வாழ்வு, இருளில் மூழ்கிப்போகிறது எனும் கருத்தைச் சொல்வதாகத் தோன்றுகிறது. அட்டை வடிவமைப்பாளர் தி.முரளிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சிறப்பாய்த் தொகுத்து வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகத்தாருக்கு, ஒரு வாசகனாக என்னுடைய நன்றிகள்.

 

நூல் : நகலிசைக் கலைஞன்

ஆசிரியர் : ஜான் சுந்தர்

பக்கங்கள் : 144

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

விலை : ரூ.130

Tagged in : Tamil, Giridharan Raghu,

   

Similar Articles.