Loading...

Articles.

Enjoy your read!

தமிழும் காதலும்!

தமிழின் தொன்மை எத்தனை வருடங்கள் பழமையானதோ தமிழுக்கும் காதலுக்குமான தொடர்பும் அத்தனை வருடம் பழமையானது.


ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அல்லது ஆராய்ந்தும் புலப்படாத ரகசியங்களுள் மனிதக்காதலும் ஒன்று. காதல் வந்தால் பட்டாம்பூச்சி பறக்கும்! உலகம் மறக்கும்! கசப்பும் இனிக்கும்! என்ற வர்ணனைகள் பல கூறினாலும், இந்த காதல் ஏன் வருகிறது? எப்படி வருகிறது? எப்போது வரும்? யாருடன் வரும்? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் இத்தனை வருடங்களில் யாரிடமும் பதில் இல்லை என்பது தான் உண்மை.இப்படி முகவரியில்லாத காதலை நம் முன்னோரும் ஆராயாமல் அனுபவித்ததால் தான் காதலும், தமிழ் சமூகமும் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
காதலிக்கத் தெரிந்தவனெல்லாம் கவிஞன் ! 

என்னும் வகையில் காதலுக்கும் தமிழுக்கும் தொன்றுத்தொட்டே விட்டக்குறை தொட்டக்குறை நிலை தான் இருந்து வந்திருக்கிறது. குடிமக்களின் வாழ்க்கையை முதலில் பேசிய சிலப்பதிகாரம் முதல் இன்று தமிழ் உலகம் போற்றும் பொன்னியின் செல்வம் வரை தமிழில் காதல் பேசாத காப்பியம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். தமிழ் உலகம் வெறும் மானுடக் காதலை பற்றி மட்டும் பேசவில்லை தெய்வத்தோடே காதல் கண்ட மகளிரின் காதலையும் பேசியிருக்கிறது. இப்படி அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமான காதலை நம் தமிழ் சமூகம் தன் வாழ்க்கையின் மூலம் அடிக்கோடிட்டு காட்டி சென்றிருப்பதை சாண்டில்யன் நூல்களைப் படித்தவர்களும், கல்கியின் நூல்களைப் படித்தவர்களும் உணர்ந்திருப்பர். இவை பேசும் காதல் கண்டு துறவறம் மேற்கொள்ள இருப்பவரும் தனக்கான துணையை தேட ஆரம்பிப்பர் என்பது பல தமிழ் வாசகர்களின் அனுபவக் கதை.


காதலியைப் பிரிந்த காதலனின் தாப மொழியையும், காதலியைப் பிரிந்த காதலனின் ஆசை மொழியையும் அன்றைய சிற்றிலக்கியங்கள் ஒவ்வொன்றும் புட்டு புட்டு வைத்திருக்கின்றன. அன்றைய தமிழ் காதல்கள் புறாவையும், குதிரையையும் கொண்டு காதல் மொழி பேசிக்கொண்டிருந்தன. அவர்களுக்கு இடையே தூரம் அதிகமாய் இருந்தது. ஆனால் மனம் ஒன்றுபட்டிருந்தது. இன்றைய நவீன உலகம் தூரங்களைக் குறைத்துவிட்டது. ஆனால் காதலர்களின் மனங்களைத் தூரமாக்கி விட்டது. கோவலனுக்காக மதுரையை எரித்த கண்ணகியும், சத்தியவானுக்காக எமனிடம் போராடிய சாவித்ரியும், ராமனுக்காக காத்திருந்த சீதையும் இன்றைய காதலர்களுக்கும், காதலுக்கும் கற்றுக்கொடுத்த படிப்பினைகள் எக்கச்சக்கம். அன்றைய காதலில் கற்பும், ஒழுக்கமும் கண்ணியமும் நாகரிகமான களவும் இருந்தது. காமம் கொண்டு காதல் வளர்த்துக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தினருக்கு வெறும் கண்கள் பேசிய காதல் மொழிகளின் சுவாரசியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 


இப்படி எல்லாம் பண்டையக் காதலை வெறும் புனிதப்படுத்தலோடு மட்டும் நிறுத்திவிட்டால் அது உண்மையான காதலுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாயிருக்கும். இன்று சாதி, மதங்களைத் தாண்ட முடியாமல் தவிக்கும் பல சாதியக் காதல்களுக்கான விதையும் இந்த தமிழ் இலக்கிய காதல் கதைகள் கூறத்தான் செய்கின்றன. அரசக் குலத்தை சாராதவர் என்பதற்காக பிரிக்கப்பட்ட சிவகாமியின் வேதனை மிகுந்த வார்த்தைகள் அந்த வலியை அழகாக சொல்லும். நாட்டியக்குலத்தில் பிறந்த அவள், நாடாளும் மங்கையாக மாறக்கூடாது என்பதற்காக சுற்றி இருந்தோர் செய்த சதி, அன்றைய சாதியின் கோரமுகத்தைக் காட்டியது. அன்றும் சரி இன்றும் சரி காதலுக்கான சமூகம் ஆண்களுக்கானது மட்டுமே என்பதை யாரும் மறுப்பதற்கில்லை ! ஒரு ஆணின் காதலைப் பெருமையாக பார்க்கும் அதே சமூகம் பெண்ணின் காதலை அப்படி ஏற்றுகொள்வதில்லை. 


காதல் என்பது ஒரு அழகிய உணர்வு! பசியைப் போல, தூக்கத்தைப் போல அது ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனிதன் வரை எல்லோருக்கும் பொதுவானது. சொல்லப்போனால் அது அவசியமானதும் கூட ! ஆனால் இன்று காதல் என்னும் பெயரில் வெறும் ஈர்ப்பு மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஈர்ப்பும் காதலுக்கு வேண்டுமே தவிர ஈர்ப்பு மட்டும் காதல் அல்ல! வெறும் புற அழகை கொண்டு மட்டும் காதலை வாங்க முடியாது. ஏனெனில் காதல் அழகைக் கொண்டு கட்டப்படுவதல்ல அது நம்பிக்கையை கொண்டு கட்டப்படுவது. அது போன்று காதல் ஒருமுறை வரவேண்டும் என்ற வரைமுறை ஏதுமில்லை ஆனால் ஒருவரிடத்தில் லயித்த மனம் வேறொருவரிடம் அத்தனை எளிதாக செல்லாது. ஆனால் அதையும் காலம் செய்து விடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி’ என்னும் பாரதியின் இந்த வரிகள் காதலின் வலிமையை காலம் கடந்தும் உணர்த்தும்.

ஆதலால் காதலை ஆராயாமல் அனுபவிப்போம் !

Tagged in : Tamil, ரெனிடா,

   

Similar Articles.