Loading...

Articles.

Enjoy your read!

எப்போது முடியும் இந்த இரண்டுமாதம்?

டேய்.. இன்னுமா தூங்கற, எழுந்திரு டா..."


     பழக்கமான அதே அம்மாவின் குரல் தான். எழுந்து அரைத் தூக்கத்தில் மணியைப் பார்த்தேன்.. அன்று கொஞ்சம் அதிகமாகவே தூங்கிவிட்டேன். பழக்க தோஷம். காரணம், அன்று வியாழக்கிழமை. பசிக்கும், தூக்கத்திற்கும் நடக்கிற போரில், பசி எப்பொழுதும் தோற்றுப்போகிற நாள். Mess schedule-ன் படி, அன்று காலை உப்புமா பரிமாறப்படும். Mess பணியாளர்கள், யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டா டீ ஆத்துற ரகமாய் அன்று சும்மாவே relax செய்வார்கள்.

 

     அந்த extra தூக்கம், கொஞ்சம் நினைவுகளைக் கிளறி விட்டது. CEG-ஆல் நிறைய விஷயங்கள் நம் தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. விடுமுறை தினங்களில், அவை ஏற்படுத்திய வெற்றிடங்களை நிரப்ப, மனம் அவ்வப்போது விடுதியில் வாழ்ந்த தினங்களை எண்ணி, உவகை கொள்கிறது.

  

   விடுதி வாழ்க்கை, பல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தது.  அரை லட்ச ரூபாய் மடிக்கணினியை விட, தேர்வுக்கு முந்தைய நாள் இரவன்று, நம்முடைய பென்சில், பேனா ஆகியவற்றுக்கு, ஐந்தடுக்குப் பாதுகாப்பு அவசியம். மற்றைய தினங்களில், குளியலறைக் காலணிகளும், தண்ணீர் பாட்டில்களும் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், நம்முடைய அறை எண்ணில் இருந்து, சுமார்  ±10 அறை எண்கள் அத்தனையிலும் அவற்றைத் துழாவ நேரிடும். 

 

 

     தினம் காலை ஒரு தேடலோடு தான் துவங்கும். " கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்" என்பதற்கேற்ப, பற்பசையைக் கேட்டு, ஒவ்வொரு அறையாய் கதவைத் தட்டின நாட்கள் அவை.  "Day scholars அவங்களே சீக்கிரமா வர்றாங்க. Hostellers உங்களுக்கு என்ன?" ரக வசனங்களும், late ஆகப் போவதால், absent போடும் ஆசிரியர்களும், வெகு சீக்கிரமே பழகிப்போய்விட்டன.

  

    தினம் இரவு, "டீ சூடா இருக்கா கோவிந்தா?" ரேஞ்சுக்கு அனைவரும் பிசியாய் இருப்பது போல காட்டிக்கொள்வோம். ஏனெனில், முதலில் attendance போடச் செல்பவனே, அறையில் உள்ள அனைவருக்கும் attendance போட்டுவிட்டு, அனைத்து காலி பாட்டில்களிலும் தண்ணீர் நிரப்பி வர வேண்டும் என்பது, விடுதி அரசியலமைப்புச் சட்டங்களில் அடிப்படையான ஒன்று.

 

     ராகுகாலம் கடந்த பின்பு, smartphone மூலம் இந்தியாவின் நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்கும் Digital India' ஆதரவாளர்கள், தங்கள் பணிகளில் மூழ்கிப்போவார்கள். இதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களும், வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்களும், facebook-ல் அப்பாவி நண்பனை playboy post-ல் tag செய்து மகிழ்வார்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர, விடுதியில் உள்ள அனைவருக்குமே பஞ்சாங்கத்தில் தீவிரமான நம்பிக்கையுண்டு. "Assignment எழுத, தேர்வுக்குப் படிக்க, மற்றும் அனைத்து academic activities-க்கும் உகந்த காலம், முந்தைய நாள் இரவே" என்ற ஊமையடிச் சித்தரின் வாக்கை பயபக்தியோடு அப்படியே பின்பற்றுவோம்.

 

    Rainbow 6, FIFA, Mini Militia போன்றவற்றை விளையாடித் தீர்த்த இரவுகள், இப்பொழுது தனிமையிலும், வெறுமையிலும் ஓடுகின்றன.  விடுமுறையில் வரும் நண்பனின் பிறந்தநாள், Whatsapp group-ல் மட்டுமே கொண்டாடப்படுகிறது. Reopening க்கு இன்னும் எவ்வளவு நாட்கள் உள்ளன என்று, மனதிற்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருக்கையில், "டேய்.. உனக்கு எத்தனை தடவை சொல்றது.. எழுந்து சீக்கிரமா குளிடா" என்று அதே குரல் கேட்டது. படுக்கையின் ஓரத்தில் கிடந்த போர்வையை எடுத்து உடல் முழுக்க போர்த்தி, சூரிய வெளிச்சத்தின் தாக்குதலில் இருந்து தப்பித்து, மீண்டும் உறங்க ஆரம்பித்தேன்..

   -சுபாஷ் சந்தர். வெ
மின் மற்றும் மின்னணுவியல்
                                          

Tagged in : Tamil, சுபாஷ் சந்தர். வெ,

   

Similar Articles.