Loading...

Articles.

Enjoy your read!

பொங்கலோ பொங்கல் !

பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற கோட்பாட்டை கொண்ட போகிப் பண்டிகை கதவை தட்டியதும், அதிகலை விழித்து எழுந்து குளிர்காய பழைய துணிகள் மற்றும் வீட்டில் வேண்டாத பழைய பொருட்களை எரிப்போம் ; அதனோடு துன்பங்களும் நிச்சயம் எரிந்திடும் என்பதில் சந்தேகமில்லை! பாக்கு எடுத்து பாட்டி போட ,பாட்டி உடன் நான் நடை போட குயவர் வீட்டிற்கு செல்வோம் .நூறு பானை தட்டி பார்த்து ,நாலு பானை உத்துப் பார்த்து ," இது நல்லா இருக்கே ",என்று பாட்டி கூற ,அந்த பானையை எடுத்து தோள் மீது வைப்பேன் .பாட்டியின் கதை கேட்டுக் கொண்டே வீட்டுக்கு திரும்புவோம் . கோவிலில் விபூதி வாங்கி வைத்து எனக்காக காத்திருக்கும் அக்கா,எனக்கும் சேர்தது சக்கரை பொங்கல் சாப்பிடும் தம்பி, கட்டிக்கரும்புகளை கட்டிக்கொண்டு வரும் அப்பா , வீட்டை சுத்தமாக்கும் அம்மா என இப்படியாக நாளைய பொங்கலை நோக்கி கழியும் போகி பண்டிகை . மறுநாள் பனி மழைபெய்வதையும் பொருட்படுத்தாமல் புள்ளி வைத்து புதுக்கோலம் போடுவாள் என் அன்னை ,கழனிக்கு சென்று கரும்போடு வீடு திரும்புவார் என் அப்பா ,நானோ காய்ச்சி வைத்த தண்ணியை ஊற்றி குளித்துவிட்டு கடைவீதிக்கு கிளம்புவேன் ,வாசலில் எதிர்வீட்டு கமலா அக்கா கோலம் கண்ணை பறிக்க தெருமுனையில் இருக்கும் பப்லு அண்ணன் கடையில் தேன்மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டே தெருவெல்லாம் திரிந்து எல்லா கோலத்துக்கும் மார்க் போடுவோம் . பிரண்டை ,வேப்பிலை ,மாவிலை ,அரசங்கிளை ,ஆலவிழுது ,இன்னும் பெயர் தெரியாத பலவற்றை தாத்தா பறிச்சிட்டு வர,வெட்டி வச்ச பொங்க கட்டிக்கு பொட்டு வைக்கும என் பாட்டி ,அடுத்து பொங்கல் வைக்க வாசல் முன்னே கத்தியால் பள்ளம் போட,மண் எடுத்து பொங்கல் வைக்க ஏற்பாடு செய்வோம்.மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் , விளக்கு ,தேங்காய் ,தாத்தா எடுத்துட்டு வந்த பொருட்களையும் ,கொள்ளைபுர மண்ணை குழைத்து செஞ்ச சூரிய வீட்டுக்குள் வைத்து ,அதுல வத்தி ஏற்றி வைத்து புதுப்பானையை கழுவி பொங்கல் வைக்க ஆயத்தமாவோம். பானை சுடும், நல்ல நேரம் வரும் , பொங்கல் பொங்கும், இன்பம் எங்கும் , "பொங்கலோ பொங்கல் ' என்று முழங்கும் ஒளியோடு தைபொங்கல் பளிச்சிடும். மாட்டுப் பொங்கல் : கலர் டீவியில் காளை அடக்குவதை பார்க்குற நகரவாசிகளை போல வீட்டுக்குள் அடங்குவதில்லை கிராமத்து மாட்டு பொங்கல் .காலையில் விரசாக எழுந்து கடைத்தெருவுக்கு போய் கயறு ,கலர் பெயிண்ட் வாங்கிவிட்டு வருவார் எங்கள் அப்பா. கயிற்றை அவிழ்த்து மாடுகளை குளத்தில் நன்கு குளிப்பாட்டி விறுவிறு என்று கூட்டிட்டு வர,பொசுபொசு மெதுவடை ஒரு பக்கம் ஆயத்தமாகும் தினுசு தினுசா மாவிலை எடுத்து தாத்தா மாலை கட்டுவார்.ஓட்டி வந்த மாட்டை தழுவி கொடுத்து அதன் கொம்புகளை சீவி கலர்கலராக பெயிண்ட் அடிப்போம்,புதுக்கயிறு போட்டுவித்து ,ஊருக்கண்ணு ஒழியட்டும்னு பொட்டு வச்சி ஆரத்தி எடுக்கும் எங்கள் பாட்டி .சுட்ட மெதுவடை சாப்பிட்டுவிட்டு மெதுவா நடந்து போய் நாட்டார் கடையில் நாலு ரூபாய்க்கு பலூன் வாங்கி கன்னுக்குட்டிக்கு கட்டி விட்ட பின்பு ,ஊரிலுள்ள மாட்டையெல்லாம் ஒரு இடத்துல கூட்டி சேர்ப்போம் ,தேங்காய் பழம் வத்து,கற்பூரம் ஏற்றி பெரியவங்க சுற்றி வர ,எந்த மாட்டுல இருக்கிற பலூனை பறிக்கிறது? என்று நினைத்துஇளசுகள் சுற்றி வர " பொங்கலோ பொங்கல் " என்ற குரல் ஓங்கும்.எல்லா மாடுகளும் வீட்டுக்கு புறப்படும் .இப்ப நடக்கும் ஒரு போட்டி அதாவது யார் மாடு வேகமாக போகுதுன்னு .இதெல்லாம் நினைக்கும் போதே மனம அப்படி மகிழ்கிறது.இருள் சூழும் போது சொந்த பந்தங்கள் எல்லாரும் பேசி சிரிச்சு ஒண்ணா சேர்ந்து Tv யில் போடப்படும் புது படத்தை பார்த்துக்கொண்டே முடிவு பெறும் மாட்டுப்பொங்கல்..... காணும் பொங்கல்: எந்த தியேட்டர் ? என்ன படம் ? பீச் போலாமா? இப்படி இருக்காதுங்க எங்கள் காணும் பொங்கல்.கண்ணில் காணும் பெரியவங்க காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குறோமோ இல்லையோ ,"பொங்கல் மரியாதை"என்று கைநிறைய பணம் வாங்கிச் சேர்ப்போம் ! கோவிலில் கூட்டம் கொழிக்கும் . இன்னிசை பாடல்கள் நாள் முழுதும் ஒலிக்கும் . இன்பம் தழைக்கும் . சமயம் பார்த்து அத்தை பொண்ணு கிட்ட வந்து பேசும். உரியடி, கபடி ,ஒட்டப்பந்தயம் ,கண்ணாமூச்சி என ஊரே சேர்ந்து பல விளையாட்டுகள் விளையாடும் ,சண்டைகள் எல்லாம் சமாதானம் ஆகும்.மனக்கஷ்டங்கள் கற்றோடு போகும்.கச்சேரி போல கலை கட்டும் காணும் பொங்கல் . பேசாமல் சென்ற சொந்தங்களும் காணாமல் போன பந்தங்களும் மகிழ்ந்து ,குலாவி,கும்மாலம் போட்டு , களிப்படையும் கலகலப்போடு நிறைவு பெறும் கிராமத்து பொங்கல் . என்ன நகரவாழ் நண்பர்களே உங்கள் சொந்த ஊருக்கு பெட்டியை கட்டிவிட்டீர்களா ! அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Tagged in : Tamil, தினகரன்.கு,

   

Similar Articles.